அரசாங்கமும், சமூக சீர்திருத்தமும். குடி அரசு - துணைத் தலையங்கம் - 19.06.1932 

Rate this item
(0 votes)

மைசூர் சமஸ்தான சட்டசபைத் கூட்டத்தின் முடிவில், திவான் சர். மிர்ஸா இஸ்மாயில் அவர்கள் செய்த பிரசங்கத்தில், 

“இந்தியாவில் சமுதாய சீர்திருத்தங்கள் சம்பந்தமான சட்டங்களை அமுலுக்குக் கொண்டு வரும் விஷயத்தில் பல கஷ்டங்கள் ஏற்படும். முதலில் பொது ஜனங்களிடம் சீர்திருத்தம் உண்டாக வேண்டும். இதனால் தான் எளிதில் சமுதாயச் சீர்திருத்தம் உண்டாகும். இவ்வாறு பொது ஜனங்களிடம் சீர்திருத்த உணர்ச்சி உண்டாகாத காரணத்தால்தான், அதிகமான பொது ஜன ஆதரவு ஏற்படும் வரையிலும் சீர்திருத்தம் சம்பந்தமான மசோதாக்களை ஆதரிக்க அரசாங்கத்தார் பின் வாங்குகின்றனர்” என்று பேசியிருக்கிறார். 

இப்பேச்சிலிருந்து பொது ஜன ஆதரவு இருந்தால் தான் அரசாங்கத்தார், சமூகச் சீர்திருத்த மசோதாக்களுக்கு ஆதரவு அளிக்க முடியும். இன்றேல் அளிக்க முடியாதென்று அர்த்தம் உண்டாகவும் இட மிருக்கின்றது. உண்மையில் இந்த அர்த்தத்தில் திவான் அவர்கள் பேசி யிருப்பாரானால், இது "அலை ஓய்ந்த பின் கடலில் ஸ்நானம் செய்யலாம்" என்னும் முடிவைப் போன்றது என்று தான் நாம் கருதுகின்றோம். 

பொது ஜனங்கள் எப்பொழுதும், மூட நம்பிக்கையுடைய வைதீகர் களுடைய பேச்சுக்களுக்குச் செவிசாய்க்கக் கூடியவர்களாகத்தான் இருப்பார் கள். ஆகையால் அவர்களே சமுதாய சீர்திருத்தத்திற்கு ஆதரவளிக்க முன் வரவேண்டுமென்று எதிர்பார்ப்பது தவறாகும். குற்றஞ் செய்கின்றவனை தானே குற்றஞ் செய்யாமல் திருந்தி வரட்டுமென்று விட்டுக் கொண்டிருந்தால் அவன் திருந்துவது எப்பொழுது? அவன் செய்த குற்றத்தை எடுத்துக் காட்டித் தண்டனையும் அளித்தால் தான் அவன் திருந்துவான் என்பது உண்மை யல்லவா? அதுபோலவே, பழய நம்பிக்கையினாலும், குருட்டுப் பழக்க வழக்கங்களினாலும் பொது ஜனங்கள் கைக்கொண்டு வரும் சமூக ஊழல் களைப் போக்க அரசாங்கத்தாரே முற்பட்டு, சட்டங்களைச் செய்து, அச்சட்டங் களின் கருத்துக்களைப் பொது ஜனங்கள் உணரும்படி செய்வதன் மூலமே சமூகச் சீர்திருத்தத்தை ஏற்படுத்த முடியும் என்பதில் சந்தேகமில்லை . 

 

சமீபத்தில் சமுதாய சீர்திருத்தம் ஏற்பட்டிருக்கும். துருக்கி முதலிய தேசங்களை எடுத்துக் கொண்டால், அங்கெல்லாம் பொது ஜனங்கள் சமுதாய சீர்திருத்த உணர்ச்சி பெற்ற பிறகு தான் சமுதாய சீர்திருத்தச் சட்டங்கள் செய்யப் பட்டதா? அல்லது அரசாங்கத்தாரே முன்வந்து சமுதாய சீர்திருத்தச் சட்டங் களைச் செய்து அவைகளுக்குப் பொது ஜன ஆதரவைப் பெற்றார்களா? என்று பார்த்தால், இவ்வுண்மை விளங்கும். அரசாங்கமே தைரியமாகச் சமுதாய சீர் திருத்தச் சட்டங்களை நிறைவேற்றி அவைகளைப் பொது ஜனங்கள் அனுசரிக் கும்படி செய்தார்கள் என்பது யாவருக்கும் தெரியும். 

இப்பொழுது இந்தியாவில் பிரிட்டிஷ் அரசாங்கத்தைக் காட்டிலும் சமுதாய சீர்திருத்தம் சம்பந்தமாகக் கொஞ்சம் முன்னணியில் நிற்கும் சமஸ்தானங்களில் முதன்மை பெற்று பரோடாவும், இரண்டாவது மைசூருமாக இருக்கின்றது என்று புகழப்படுகின்றது. இந்த நிலைமையில் திவான் அவர்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்தார் சமுதாய சீர்திருத்தம் சம்பந்தமான மசோதாக்கள் சட்டசபையில் ஆலோசனைக்கு வரும்போது பொது ஜன ஆதரவு இருக் கிறது என்று தெரிந்தால்தான் நாங்கள் ஆதரிப்போம் என்ற பல்லவியைப் பாடிக் கொண்டிருப்பது போல மைசூர் அரசாங்கத்தின் சார்பாகவும் பாட ஆரம்பித்ததைப் பற்றி நாம் வருந்துகின்றோம். ஆயினும் திவான் அவர்கள் “அரசாங்கத்தார் ஆதரவு அளிக்கப் பின்வாங்குகின்றனர்” என்று தான் கூறுகிறாரே ஒழிய பிரிட்டிஷ் அரசாங்கத்தைப் போல ஆதரவு அளிக்க மாட்டோம் என்று கூறவில்லை என்பதைப் பார்க்கச் சிறிது சமாதானம் அடைய வேண்டியிருக்கிறது. இவ்வாறு பின்வாங்கிய மனதுடனாவது சமூகச் சீர்திருத்த சட்டங்களுக்குக் கூடியவரையிலும் ஆதரவு அளித்து வரும் மைசூர் அரசாங்கத்தையும் திவான் சர். மீர்சா இஸ்மாயில் அவர்களையும் பாராட்டுகின்றோம். சென்ற சட்டசபைக் கூட்டத்தில் 'பால்ய விவாகத்தடைச் சட்டம்' மைசூர் சட்ட சபையில் நிறைவேறி இருப்பதும் அவ்வரசாங்கம் சமுதாய சீர்திருத்த விஷயத்தில் ஊக்கம் காட்டி வருகிறது என்பதற்கு ஒரு உதாரணமாகும் என்பதையும் இச்சமயத்தில் நினைப்பூட்டுகிறோம். 

குடி அரசு - துணைத் தலையங்கம் - 19.06.1932

 
Read 48 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.